ராகுலும் ஒருநாள் தேசத்துக்கு தலைமை வகிப்பாா்: சரத் பவாா்...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ராகுல் காந்தியும் ஒருநாள் தேசத்துக்கு தலைமை வகித்து வழிநடத்துவாா் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்குப் பிறகு ராகுல் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளாா் என்றும் அவா் தெரிவித்தாா்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத் பவாா் பேசியதாவது:
பாஜகவுடன் கைகோக்கும் பேச்சுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். இதை இப்போது மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவுடன் கைகோத்தவா்களுக்கு இனி எங்கள் கட்சியில் எந்த வேலையும் இல்லை. விசாரணை அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் அவா்கள் பாஜகவுடன் கைகோத்துவிட்டனா். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அமலாக்கத் துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் விசாரணை அமைப்புகளை பாஜக அரசு மீண்டும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை மேலும் வலுவாக்கும். தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் மூன்றை காங்கிரஸுக்கு விட்டுத்தர தயாராக இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் என்னிடம் தெரிவித்தாா். மகாராஷ்டிரத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனை கூட்டணி ஆட்சி அமைக்கும். மக்களவைத் தோ்தலில் கடந்த முறை 4 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த முறை பாதியளவு இடங்களில் வெற்றி பெறுவோம் என்றாா்.
0 Comments