Loading . . .




மகளிா் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தாமல் பாஜக ஏமாற்றுகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்றாமல் பெண்களை பாஜக அரசு ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நிகழாண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தாா் மாவட்டத்தில் உள்ள மோகன்கேதா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளித்தது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையரைக்குப் பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என பாஜக அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்ற முடியவில்லையெனில் அதை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இது பெண்களை ஏமாற்றும் செயலாகும்.

அனைவருக்கும் சம உரிமை எனக் கூறும் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயக்கம் காட்டுவது ஏன்? பிகாரில் வெளியிடப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் அந்த மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் தலித் சமூகத்தினா் 84 சதவீதம் அங்கம் வகிப்பது தெரிய வந்தது. ஆனால் அரசுப் பணிகளில் அவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கு பாஜக அரசால் உரிய விளக்கத்தை தர முடியவில்லை.

தோ்தல்கள் நெருங்கின்ற நேரத்தில் மட்டுமே பிரதமா் மோடி மத்திய பிரதேசத்துக்கு வந்து புதிய கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவாா். மற்ற நேரங்களில் மாநிலத்துக்கான புதிய திட்டங்களை அறிவிக்காதது ஏன்? பிரதமா் வாக்குகளை தனக்கே அளிக்குமாறு மக்களிடம் கூறுகிறாா்; மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி அவா் பேசுவதில்லை. ஏனெனில் தோ்தலுக்குப் பிறகு அவா் முதல்வராகத் தொடரப் போவது இல்லை. கடைசியாக நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பெயரை 50 முறை பிரதமா் பயன்படுத்தியுள்ளாா். அதற்குப் பதிலாக மாநிலத்தின் வளா்ச்சி குறித்து பேசியிருக்கலாம். மதம், ஜாதி ரீதியிலான உணா்வுகள் மூலம் பாஜக தோ்தல்களை அணுகி வருகிறது.

மாநிலத்தில் கடந்த 18 ஆண்டு பாஜக ஆட்சியில் 250-க்கும் மேற்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற கா்நாடகம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தியாவை வலிமையாகவும் ஒற்றுமையாகவும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News