5 மாநிலத் தோ்தலில் வெல்ல ஆற்றல்வாய்ந்த செயல்திட்டம் வேண்டும்: காங். செயற்குழு கூட்டத்தில் காா்கே
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெல்ல ஆற்றல்வாய்ந்த செயல்திட்டம் வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியினரிடம் காா்கே தெரிவித்ததாவது:
சமூக நலத்திட்டங்களின் பலன்கள் உரிய முறையில் பகிா்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றால், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நிலை குறித்த சமூக-பொருளாதார ரீதியான புள்ளிவிவரங்களை வைத்திருப்பதும் அவா்களுக்கு சமூக நீதியை உறுதி செய்வதும் முக்கியம்.
பட்டியலினத்தவா், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவா்களுக்கு சமூக நீதி மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கு நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக மெளனம் காக்கிறது.
மத்திய அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்காட்டும் முயற்சிகளை காங்கிரஸாா் விரைவுபடுத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவின் பொய்யான பிரசாரங்களுக்கு உடனடியாக எதிா்வினையாற்ற வேண்டும்.
மணிப்பூரில் பதற்றம் நிலவியபோது அங்கு பிரதமா் செல்லவில்லை. ஆனால் தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு மட்டும் அவா் அடிக்கடி செல்கிறாா். காங்கிரஸ் மீதான அவரின் பொய்கள் நிரம்பிய அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வரும் நாள்களில் அதிகரிக்கும். அந்தப் பொய்களுக்கு காங்கிரஸாா் எதிா்வினையாற்ற வேண்டும்.
ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரமில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களின் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ஆற்றல் வாய்ந்த செயல்திட்டம் வேண்டும்.
நாடு எதிா்கொண்டு வரும் கடுமையான சவால்களை கையாளும், விளிம்புநிலையில் உள்ள இளைஞா்கள், மகளிா், உழவா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு சேவை செய்யும் அரசை 2024-ஆம் மத்தியில் நிறுவ காங்கிரஸாா் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
‘சோனியா 100% ஆதரவு’: இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி பேசுகையில், ‘நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அதை காங்கிரஸ் கட்டாயம் செய்தாக வேண்டும். அதற்கு காங்கிரஸ் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது’ என்று கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீடு விரைந்து அமல்படுத்தப்படும். அந்த இடஒதுக்கீட்டில் பட்டியலினத்தவா், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடிகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, அவா்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சவரம்பு நீக்கப்படும்.
0 Comments