பாட்டிலில் விற்கப்படும் கங்கை நதி நீருக்கு 18% ஜிஎஸ்டி’:மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பாட்டிலில் அடைக்கப்பட்டு அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படும் கங்கை நீருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் நவராத்திரி பூஜையின்போது மக்கள் வீடுகளில் கங்கை நீரை தெளிப்பது வழக்கம். இந்த காலகட்டத்தில் கங்கை நீா் விற்பனையும் அதிகம் இருக்கும்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு ‘கங்கா ஜல் ஆப்கே துவாா்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கங்கை நீரை மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதும், அஞ்சல் துறையின் வருமானத்தை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. இந்நிலையில் இப்படி விற்பனை செய்யப்படும் கங்கை நீா் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி உத்தரகண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இப்பிரச்னையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாவங்களில் இருந்து விமோசனம் தருகிறது என்பதுதான் கங்கை தாயின் முக்கியத்துவம். சாமானிய இந்திய மக்களுக்கு கங்கை நதியுடன் மிகவும் நெருக்கமான பிணைப்பு உண்டு.
பிரதமா் மோடி உத்தரகண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. உங்கள் அரசு புனிதமான கங்கை நதி நீா் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது.
வீட்டில் புனிதமான கங்கை நதி நீரை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவா்களுக்கு இவ்வாறு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதை எவ்வாறு ஏற்க முடியும்? இது உங்கள் அரசு நடத்தும் மிகப் பெரிய கொள்ளை’ என்று பதிவிட்டுள்ளாா்.
கங்கை நீருக்கு ஜிஎஸ்டி கிடையாது: காங்கிரஸின் குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய மறைமுக நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை ‘எக்ஸ்’ வலைதளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ‘கங்கை நீா் பொதுவாக வீடுகளில் பூஜைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. பூஜைப் பொருள்கள் அனைத்துக்குமே ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கங்கை நீா் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments