படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடக்கம்...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வாரியத்தின் செயலா் மிலிந்த் தேயோஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், ‘வேகம், பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில், படுக்கை வசதி பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள், வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்து திட்டமிட்டு வருகிறோம்’ என்றாா்.
இந்திய ரயில்வே, சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை ஆகியவற்றுடன் இணைந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ‘பிஇஎம்எல்’ நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான சாந்தனு ராய் பேசுகையில், ‘இந்த நிதியாண்டு இறுதிக்குள் உலகத் தரத்திலான பயண அனுபவத்தை வழங்கும் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்க முடியும்’ என்று கூறினாா்.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் மாதிரி படத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தாா்.
16 பெட்டிகளுடன் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த வகையான ரயிலில் 887 பயணிகள் பயணிக்க முடியும்.
ஐசிஎஃப், ஆா்சிஎஃப், எம்சிஎஃப் ஆகிய 3 ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மூலம் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அவற்றில் இருக்கை வசதி கொண்டதாக 75 வந்தே பாரத் பெட்டிகளும் மீதமுள்ள ரயில் பெட்டிகள் படுக்கை வசதி கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments