மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழையும்போது, வெளியே செல்லும் போதும் தானியங்கி கதவுகள் அருகே உள்ள க்யூஆா் குறியீட்டை அறிதிறன் பேசியில் ஸ்கேன் செய்தால் போதும்.
தில்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடத்துக்கான டிக்கெட்டுகளை ‘க்யூ ஆா்’ குறியீடு முறையில் ‘பேடிஎம்’ செயலி வழியாக பெறலாம் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த சேவையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விகாஸ் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தச் சேவையைப் பெற பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் உள்ளே நுழையும்போதும் உள்ள க்யூஆா் குறியீட்டை அறிதிறன் கைப்பேசியில் ஸ்கேன் செய்ய வேண்டும். இதேபோல், ரயில்நிலையத்தில் இருந்து வெளியேறும்போது தானியங்கி கதவுகள் அருகே உள்ள க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும். பயணத்துகான டிக்கெட் கட்டணம் பேடிஎம் செயலி வழியாக செலுத்திவிடலாம் என்று தில்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.
இந்தச் சேவை ஏா்போா்ட் மெட்ரோ வழித்தடத்தில் செயல்பாட்டில் உள்ளது. தற்போது தில்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விகாஸ் சிங் கூறுகையில், ‘தேசிய தலைநகா் பகுதியில் மெட்ரோவில் தினசரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், தங்கள் பயணத்தை மன அழுத்தமின்றி மேற்கொள்ள இந்த புதிய சேவை உதவும்.
முன்பு இந்த டிக்கெட் சேவையில் எண்ம இந்தியாவை புகுத்தி எண்ம வடிவில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டன’ என்றாா்.
மேலும், அக்டோபா் 15-ஆம் தேதி நடைபெறும் தில்லி அரை மாரத்தானின்போது தில்லி மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தட சேவைகளும் காலை 3.45 மணிக்கு தொடங்கும். காலை 6 மணி வரையில் சுமாா் 15 நிமிஷங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன் பிறகு வழக்கமான இடைவெளியில் மெட்ரோ சேவை இருக்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments