Loading . . .




பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.

பின்னர், கடந்த 7-ம் தேதி தலைநகர் டெல்லியில் என்டிஏ எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

4 முறை முதல்வர், 3-வது முறை பிரதமர்:

கடந்த 2001-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை குஜராத் முதல்வராக பதவியேற்றார். ஒட்டுமொத்தமாக 4 முறை முதல்வராக அவர் இருந்துள்ளார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக பதவியேற்றார். பின்னர், 2019-ம் ஆண்டில் 2-வது முறையாக அவர் பதவியேற்றார். தற்போது 3-வது முறையாக அவர் பிரதமர் பதவியேற்றுள்ளார்.

நாட்டின் முதல் பிரதமர் நேரு கடந்த 1952, 1957, 1962 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 3 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவியை வகித்தார். அந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News