நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்து ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.144.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. ஒருங்கிணைந்த வரி அமைப்பு மூலம் வரி வசூல் திறன் மேம்பட்டதுடன், நாடு முழுவதும் வணிக நடவடிக்கைகளும் விரிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மராட்டியம் ரூ.22.28 லட்சம் கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 20.7 சதவீதமாகும். தொழில் மற்றும் வணிக வளர்ச்சி அதிகமுள்ள மாநிலமாக மராட்டியம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு ரூ.8.55 லட்சம் கோடி வசூலுடன் நாட்டில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு 7.9 சதவீதமாகும். உற்பத்தித் துறை, தொழில் வளர்ச்சி மற்றும் வணிகச் செயல்பாடுகள் இந்த சாதனைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
2017 ஜூலை 1ஆம் தேதி அறிமுகமான ஜிஎஸ்டி, பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரி அமைப்பை உருவாக்கியது. அதன் பின்னர் பல கட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வரி செலுத்தும் நடைமுறைகள் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வலுவான வரி நிர்வாகத்திற்கும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.
0 Comments