சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வி பாடத்திட்டம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திர மோகன் இ.ஆ.ப., இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முனைவர் வ. நாராயணன், பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ. ஆ. நரேஷ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந. லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்வித் துறையின் எதிர்கால முன்னேற்றம், மாணவர்களின் கற்றல் தரம் மற்றும் பாடத்திட்ட மேம்பாடு குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கூட்டம், எதிர்கால பாடத்திட்ட வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments