போக்குவரத்துப் பிரிவுக்கு ஏஎன்பிஆர் கேமராவுடன் ரோந்து வாகனங்கள்: சாலை விதிகளை மீறுவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வாய்ப்பு
The Forecast 2 years ago சென்னை
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு ஏஎன்பிஆர் கேமராவுடன் கூடிய ரோந்து வாகன சேவையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.22.42 லட்சத்துக்கு 360 டிகிரி சுழலும் வசதிக் கொண்ட ஏஎன்பிஆர் கேமரா, 2 டி ரேடாருடன் கூடிய 2 அதிநவீன ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ரோந்து வாகனங்களை நகரின் எந்தப் பகுதியிலும் நிறுத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய முடியும். முக்கியமாக வாகனங்களில் அதி வேகமாக செல்பவர்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர், கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது
வழக்குப் பதிய முடியும். கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் விதிமுறை மீறல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் கைப்பேசிக்கு இ-செலான் அனுப்பப்படும். தென்னிந்தியாவில் இந்த அதிநவீன ரோந்து வாகனத்தை சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து பூங்கா: மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய பயன்படும் ப்ரீத் அனலைசர், முகத்தை தெளிவாக படம் பிடிக்கும் நவீன கேமராவுடன் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவி ரூ.18.99 லட்சத்துக்கு மொத்தம் 50 வாங்கப்பட்டுள்ளன. இதேபோல நகரின் எந்தப் பகுதியிலும் தற்காலிகமாக பொருத்தி நேரலையில் காட்சியை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பக் கூடிய 8 'டிரைபேடு கேமராக்கள், 100 சாலைத் தடுப்பு மின் விளக்குகள், காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுத்தும் பேட்டன் விளக்குகள் உள்ளிட்ட 10 நவீன கருவிகள் ரூ.92 லட்சத்து 62 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரீனா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலத்திடம் உள்ள போக்குவரத்து பூங்கா ரூ.2.07 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கருவிகளை போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கும் விழா போக்குவரத்து பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் தலைமை வகித்தார். என்ஐசி இயக்குநர் ஜீவிதா,துணை ஆணையர்கள் பி.சரவணன், சக்திவேல்,சமய்சிங் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.10 கோடி சாலை பாதுகாப்பு நிதி: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், புதிய கருவிகளை போலீஸாரிடம் வழங்கினார். புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து பூங்காவை சங்கர் ஜிவால் சுற்றி பார்த்தார். முன்னதாக அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழக அரசின் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து இந்தாண்டு ரூ.10 கோடி சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந் நிகழ்ச்சியில் போக்குவரத்து திட்டமிடல் பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments