Loading . . .




சென்னை குடிநீர் வாரிய வசமாகும் அம்மா குடிநீர் நிலையங்கள்

The Forecast 2 years ago சென்னை

சென்னை மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் 53 அம்மா குடிநீர் நிலையங்களை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்த தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மாதாந்திர

மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், சென்னை பள்ளிகள், அம்மா உணவகம், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்களில் உள்ள காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். தூய்மைப் பணியாளர் பற்றாக்குறை இல்லாத வகையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் உடைமாற்றும் அறை அமைக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளை முறையாக ஆராய்ந்து அனுமதி அளிக்க வேண்டும். தனியார் வணிக வளாகங்களில் ® நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட

கோரிக்கைகளை வைத்தனர்.

ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சாலைகளில் பிறதுறை சார்ந்த பணிகள் மேற்கொள்வது உறுதி செய்த பின் அங்கு சாலை அமைக்கப்படும். வார்டு அளவில் ஒரு குறிப்பிட்ட பணத்தை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகள் குறித்து இணைய வழியாக வரும் புகார்களின் உண்மைதன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.

36 தீர்மானம் 

மாமன்றக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சியை விட தண்ணீரை சிறப்பாக கையாளும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் மாநகராட்சி பகுதியில் உள்ள 53 அம்மா குடிநீர் நிலையங்களை ஒப்படைக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பல்நோக்கு வளாகம் அமைக்கப்படும். ஆர்.ஏ.புரம், சி.பி.ராமசாமி புர சாலை, தியாகராய சாலை, - என்.எஸ்.கே.சாலையில் ரூ.160 கோடியில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்தம் அமைக்கப்படும்சென்னை பள்ளிகளுக்கு ரூ.2.65 லட்சத்தில் முதலுதவி பெட்டிகள் கொள்முதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாய்மை அடைந்த பெண் உறுப்பினர்களுக்கு சிறப்பு வசதி

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தாய்மை அடைந்த பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் பா.விமலா (மார்க்சிஸ்ட்-வார்டு 41) கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சி பெண் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் தாய்மை அடைந்துள்ளனர். கடந்த மாமன்ற கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வந்த அவர்கள் வெளியே நிற்க வேண்டிய சூழல் நிலவியது. அவர்களின் வசதிக்காக ரிப்பன் மாளிகையில் தனி அறை ஒதுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், மாமன்ற உறுப்பினரின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து விரைவில் செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா பதிலளித்தார்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News