4.80 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்க இலக்கு: செப்டம்பர் முதல் வகுப்புகள்
The Forecast 2 years ago கல்வி
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் நிகழாண்டு தமிழகத்தில் 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக 38 மாவட்டங்களிலும் கற்போர் எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செப்டம்பர் முதல் வகுப்புகள் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் வாயிலாக முற்றிலும் தன்னார்வ முறையில் செயல்படுத்தப்படும் 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027' என்ற புதிய ஐந்தாண்டு வயது வந்தோர் கல்வித் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தத் திட்டமிட்டு அதற்கான வழிகாட்டுதல்கள்
வெளியிடப்பட்டன.
இதனடிப்படையில் 2022-2023-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு 5 லட்சத்து 28 ஆயிரத்து 416 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நிகழ் நிதியாண்டில் (2023-2024) அனைத்து மாவட்டங்களிலும் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி 2024 பிப்ரவரி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்களால் கண்டறியப்படும் பள்ளிகளில், மையங்களில் குறிப்பாக கற்போருக்கான நேரங்களில் செயல்படுத்தப்படவேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில்
வசிக்கும் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதோரை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை ஜூலை மூன்றாவது வாரத்துக்குள் முடிக்கப்படுதல் வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments