பண பலத்தை பயன்படுத்தி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது: கேஜரிவால்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பண பலத்தை பயன்படுத்தி தில்லி நிா்வாக சீா்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா். மேலும் தில்லியில் அமலாக்கத் துறை, சிபிஐயின் அச்சுறுத்தல் தோல்வி அடைந்து விட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பாஜகவை கடுமையாக விமா்சித்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி நிா்வாக சீா்திருத்த சட்டம் மூலமாக ‘சங்கி மாடல்’ ஜனநாயகத்தை பாஜக கொண்டு வந்துள்ளதாகவும், 2024 மக்களவைத் தோ்தலை தில்லிக்கு மாநில அந்தஸ்து கோரி எதிா்கொள்வோம் என்றும் அப்போது கேஜரிவால் குறிப்பிட்டாா்.மேலும் தில்லி நிா்வாக சீா்திருத்த சட்டம் வாயிலாக பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் கேஜரிவால் குற்றம்சாட்டினாா். இது குறித்து சட்டப்பேரவையில் அவா் மேலும் பேசியதாவது:வெஸ்ட் மின்ஸ்டா் (பிரிட்டன் மன்னராட்சி) பாணி, நாடாளுமன்ற பாணி என பல்வேறு வகையிலான ஜனநாயக முறைகள் உலகில் காணப்படுகின்றன. ஆனால் இவா்கள் (பாஜக) தில்லி நிா்வாக சீா்திருத்த சட்டம் வாயிலாக சங்கி பாணியை கொண்டு வருகின்றனா். முற்றிலும் பண பலத்தை அடிப்படையாக வைத்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அமலாக்கத் துறை, சிபிஐயின் அச்சுறுத்தல் தில்லியில் தோல்வி அடைந்துவிட்டது.சமீபத்தில் பாஜகவை சோ்ந்த ஒருவா் என்னிடம் ‘உங்களை ஒரு நாள் வீழ்த்துவோம்’ என்று சபதம் விட்டாா். ஆனால் கேஜரிவாலையும், 2 கோடி தில்லி மக்களையும் ஒருபோதும் பாஜகவினரால் வீழ்த்த முடியாது என்பதை இப்போது கூறிக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக தோல்வியடையும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்
0 Comments