Loading . . .




சந்திரபாபு நாயுடு கைது ஏற்புடையது அல்ல: மம்தா பானர்ஜி கண்டனம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி கண்டனம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக, அவரை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எவர் ஒருவரையும் யாரும் பழிவாங்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். மாநிலம் தழுவிய பந்த்: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் மூடியிருக்கின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News