த.நா. ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 50வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையினை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
சென்னை எம்.ஆர்.சி நகர் இமேஜ் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 50வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையினை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று வெளியிட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
முன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனமாக 1974ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) துவங்கப்பட்டது. சமுகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை பொருளாதார ரீதியில் மேம்படச்செய்யும் வகையில் பல்வேறுபட்ட தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
தாட்கோ நிறுவனமானது பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுதொழில், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் தொழில் புரிந்து பொருளீட்டும் உதவும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு திட்டத்தொகையில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ 3.50 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது நிதி உதவி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ 2.00 இலட்சத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு முதல் ரூ 3.00 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும் இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டினை ஊக்குவிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சமுகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் தாட்கோ மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி இ.ஆ.ப., , பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை ம.தொ.ப., சென்னை மண்டல அஞ்சல் தலைமை இயக்குநர் பா.ஆறுமுகம் மற்றும் தாட்கோ முன்னால் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments