சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது
The Forecast 1 year ago அரசு செய்திகள்
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்குழுவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்வது, சென்னை கிராம நத்தம் நிலங்களில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழும மனையிடங்களுக்கு பட்டா வழங்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வேண்டியுள்ள பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் இரா.மூர்த்தி, மரு. நா.எழிலன், எ.எம்.வி. பிரபாகரராஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி. S.முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசு செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments