விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
The Forecast 1 year ago அரசு செய்திகள்
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிமுக அறிவித்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பரபரப்பாக நடந்த பிரச்சாரம் கடந்த 8-ம் தேதி மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முதல் மூத்தகுடிமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மேலும், இத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 276 வாக்குச்சாவடிகளில் இருந்தும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 Comments