புதுதில்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தின் கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago அரசு செய்திகள்
புதுதில்லி மிக தீவிர நிலஅதிர்வு ஏற்படும் மண்டலமாக உள்ளதால், நில அதிர்வைத் தாங்கும் வகையில், புதுடெல்லி சாணக்யபுரி, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் உள்ள பழைய வைகை இல்ல கட்டடங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்ட ரூ.257 கோடி மதிப்பீட்டில், அரசாணை வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.07.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் புதுதில்லியில் உள்ள பொதிகை இல்ல கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கட்டடம் தீவிர நிலஅதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம் மூன்று (3) அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஆறு (6) மேல் தளங்களை கொண்டு, மொத்தம் 3 இலட்சம் சதுர அடி பரப்பளவில், பணியாளர் குடியிருப்பு பகுதி, விருந்தினர் இல்ல பகுதி மற்றும் மிக முக்கிய பிரமுகர் பகுதி ஆகிய மூன்று பகுதிகளாகக் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பழைய கட்டடங்கள் பாதுகாப்பாக அகற்றி, கட்டட கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்துதல், கட்டட பணித்தளத்தின்கீழ் உள்ள பாறைக் கற்கள் அப்புறப்படுத்துதல், பிரதான வைகை இல்ல கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகங்களுக்கு மாற்று கட்டடத்தில் இயங்க வசதி ஆகிய பணிகளின் தற்போதைய நிலை குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் களஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், புதுதில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., பொதுப்பணித்துறையின் புதுதில்லி உள்ளுறை ஆணையர் ஆஷிஷ்குமார் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் இரா.விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments