மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது
The Forecast 2 weeks ago தேசிய செய்திகள்
மணிப்பூரில் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசு உள்ளது. இந்த அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு அளித்துள்ள கடிதத்தில், ஜேடியு மாநிலத் தலைவர் கே.எஸ். பிரேன் சிங் ஆளுநர் பல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “பிப்ரவரி / மார்ச் 2022-இல் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், ஜேடியுவால் நிறுத்தப்பட்ட ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜேடியுவின் ஐந்து எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவினர். இது தொடர்பான விசாரணை சபாநாயகர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது.
இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாக ஐக்கிய ஜனதா தளம் மாறிய பிறகு, பாஜக தலைமையிலான அரசுக்கான ஆதரவை ஜேடியு வாபஸ் பெற்றது. எனவே, மணிப்பூரில் உள்ள ஜேடியுவின் ஒரே எம்.எல்.ஏ.-வான முகமது அப்துல் நசீரின் இருக்கை, சட்டமன்றத்தின் கடைசி அமர்வில் சபாநாயகரால் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்" என்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் குமார் வந்தார். பிஹாரில், பாஜக - ஜேடியு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் ஜேடியு இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியு விலகி இருப்பது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த முடிவால், பிரேன் சிங் அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 37 இடங்களைக் கொண்டுள்ளது. மேலும், நாகா மக்கள் முன்னணியின் ஐந்து எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சைகளின் ஆதரவையும் பாஜக கொண்டுள்ளது.
0 Comments