இந்திய ராணுவம், ஓடிசா மாநிலத்தின் சந்திப்பூர் சோதனைத் தளத்தில் அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இந்த சோதனையின் மூலம் ஏவுகணையின் தொழில்நுட்பத் தயார்நிலை மற்றும் செயல்திறன் மீண்டும் உறுதி செய்யப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னி-1 ஏவுகணை குறுகிய தூர தாக்குதல் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் முதல் 1,200 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மேலும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் இதற்கு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சோதனையின் போது ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுதல் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை பாதுகாப்பு மற்றும் விஞ்ஞான குழுக்கள் தொடர்ந்து கண்காணித்தன.
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஏவுகணை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்திறனை உறுதி செய்ய இதுபோன்ற சோதனைகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
அக்னி-1 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தேசிய பாதுகாப்பு வலிமைக்கும் மேலும் உறுதுணையாக இருக்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments