இந்தியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் இணைய சேவையை மேம்படுத்தும் நோக்கில் செயற்கைக்கோள் அகலஅலை இணைய சேவைக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்தின் குய்பர் திட்டம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கான கடிதம் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் தனது கடிதத்தில், பாரம்பரிய கம்பி வழி அகலஅலை இணைய சேவையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது பல இடங்களில் சவாலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் இணைய இணைப்பை வழங்குவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செயற்கைக்கோள் இணைய சேவை முக்கிய தீர்வாக அமையும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுச் சேவை நிறுவனங்களுக்கு நம்பகமான அதிவேக இணைய வசதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் மேலும் வலுப்பெறும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இணைய அணுகலை விரிவுபடுத்தும் முயற்சியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்கு அனுமதி கிடைத்தால், தொலைதூர பகுதிகளிலும் தரமான இணைய வசதி கிடைக்கும் புதிய வாய்ப்பு உருவாகும்.
0 Comments