Loading . . .




86 ஆவது வேளாண் விஞ்ஞானிகள்-விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு

The Forecast 3 years ago சமயமூர்த்தி இ.ஆ.ப.,

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 86 ஆவது வேளாண் விஞ்ஞானிகள்-விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு 

 நடைபெற்றது .


தமிழக விவசாயிகளின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு, அதிக மகசூல் எடுப்பதற்கு விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நவம்பர் 25ஆம் தேதி 86 ஆவது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில்,  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி அவர்களும்,  தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும்,  தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் . கீதாஜீவன் அவர்களும்,  தமிழ்நாடு கால்நடை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் .அனிதா.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களும்,  விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்களும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப அவர்களும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கே.செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்களும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கீதாலட்சுமி அவர்களும், துறைத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், சர்க்கரைத் துறைகளைச் சார்ந்த அலுவலர்களும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.

 வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தனது உரையில், நெல் உற்பத்தியில் சன்னரக நெல் சாகுபடியை அரசு ஊக்குவித்து வருவதால் ஏற்றுமதி தரம் வாய்ந்த புதிய சன்ன இரகங்களையும், காவேரி டெல்டா மாவட்டங்களில் பருவ மழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகளை தாங்கி வளரக்கூடிய சன்ன நெல் ரகங்களையும் மக்காச்சோளம், கம்பு, பருத்தி, காய்கறி பயிர்களில் தனியார் வீரிய ஒட்டு ரகங்களின் மகசூலுக்கு இணையாக மகசூல் தரக்கூடிய புதிய இரகங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதனை உடனுக்குடன் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பயிற்சியளிக்க வேண்டும். வேளாண் அறிவியல் மையமும் வேளாண்மை துறையும் இணைந்து விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். உயர் மகசூல் தரக்கூடிய . ரகங்களில் விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகளையும், நாற்றுக்களையும் உரிய பருவத்தில் விநியோகம் செய்ய பல்கலைக்கழகமும் விரிவாக்கத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும். நெல் அறுவடைக்கு இயந்திரம் இருப்பது போல, மணிலா, எள், பயறு வகைப் பயிர்கள் அறுவடைக்கு சிறிய இரக இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டும். அறுவடைக்குப் பின் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனுக்காக கரும்பில் அதிக மகசூல் தரக்கூடியதும் பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும், அதிக சர்க்கரை கட்டுமானம் தரக்கூடிய கரும்பு ரகங்களை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறியும் வகையில், ஆராய்ச்சிப் பணிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று,  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்ந்து,  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி அவர்கள் தனது உரையில், வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு. வேளாண் துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இவ்வரசு பதவியேற்றவுடனேயே, வேளாண்மை-உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், வேளாண்மைக்கென்று தனிநிதிநிலை அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, பல்வேறு அரசு அறிவிப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது. மேலும், கிராம பஞ்சாயத்து அளவில் வேளாண் சார்ந்த பல்வேறு துறைகளின் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தை அறிவித்து கிராமங்களில் உள்ள தரிசு நிலத் தொகுப்புகளில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அத்தரிசு விளைநிலங்களாக நிலங்களை மாநில அரசு உரிய சேவைகளை மாற்றுவதற்குநடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்கள்.

இக்கருத்தரங்கில் வானிலை தொடர்பான முன்னறிவிப்பினை கிராம அளவில் வழங்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய இணையதளத்தை துவக்கி வைத்தார்கள்.

மாலையில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் அவர்களின் தலைமையில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு களப்பிரச்சினைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகளும், துறை அலுவலர்களும் விரிவாக விவாதித்தனர்.

விவாதிக்கப்பட்ட தலைப்புகள்: தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு தெரிவித்து, அதற்கான தீர்வு காணும் வகையில், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய இரகங்கள், பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள் போன்ற உத்திகளை விவசாயிகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில், பல்வேறு துறை சார்ந்த விரிவாக்க அலுவலர்களுக்கு தேவையான தொழில்நுட்பச் செய்திகளும் இக்கருத்தரங்கில் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில் வறட்சி, வெள்ளம், பூச்சி, நோய்களை தாங்கி வளர்ந்து, அதிக மகசூல் தரவல்ல புதிய ரகங்களை வெளியிடுதல், உழவியல் பிரிவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள், பயிர்ப் பாதுகாப்பு, வேளாண் இயந்திரமயமாக்கல், விளை பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல், தோட்டக்கலை மற்றும் விரிவாக்க அணுகு தோட்டக்கலை சார்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண் முறையில் கையாள வேண்டிய நவீன உத்திகள், வேளாண் வணிகத்தில் உள்ள புதிய அணுகுமுறைகள் மற்றும் வாய்ப்புகள், வேளாண் கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இறுதியில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் உரையில், வேளாண் விஞ்ஞானிகளும் வேளாண் விரிவாக்க அலுவலர்களும் விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடி அதற்கான தீர்வுகாண்பதற்கு இது போன்ற கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ரகங்கள் விரிவாக்க அலுவலர்களால் பெருக்கம் செய்யப்பட்டு விவசாயிகளை சென்றடைய வேண்டும். இதில் பல்கலைக்கழகத்தின் பங்கும் வேளாண்மை துறையின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்யக்கூடிய இரகங்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும்.

தற்போது, நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் இதர மாநில ரகங்களும் தனியார் ரகங்களும் தமிழக விவசாயிகளால் பெரிதும் விரும்பி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய ரகங்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து அவை தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைக்கேற்றவாறு வளர்ந்து உயர் மகசூல் தரக்கூடிய ரகங்களா என்பதை வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆராய வேண்டும். அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்

ஆராய்ச்சிப் பணிகள் இதுபோன்ற மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு அகில உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுவதற்கும், சாகுபடிக்கான இயந்திரங்களை கண்டறிந்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும். அதற்காக மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, பொதுமக்களிடையே சிறு தானியங்களின் தேவை அதிகரித்தால் சாகுபடி பரப்பு அதிகமாகும் என்பதால் சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தி, சிறுதானியங்களின் தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தற்போது வேளாண் பணிகளுக்கு தேவையான பணியாட்கள் கிடைக்காத காரணத்தினால் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகளில் சாகுபடி செலவு அதிகரித்து வருகிறது. நெற்பயிரைப் போன்று, சிறு, குறு விவசாயிகளுக்கேற்றவாறு, இப்பயிர்களிலும் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளுக்கான இயந்திரங்களை புதிதாக வடிவமைக்க வேண்டும். அறுவடைக்குப் பின் விளை பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வகையில், தற்போதுள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள உட்கட்டமைப்புகளை அதிகளவில் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் வேளாண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சிக்கும் வேளாண் விரிவாக்கத்திற்கும் உள்ள இடைவெளியை குறைத்து, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதில், இன்றைய மாநாடு மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்கள்.


0 Comments

Post your comment here

சமயமூர்த்தி இ.ஆ.ப., Relateted News