Loading . . .




அதானி விவகாரம் காங். மனு நாளை விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

The Forecast 3 years ago காங்கிரஸ்


அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கும், செபிக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.   இதற்கு உச்ச நீதிமன்றத்தில் செபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழும மோசடி புகார் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. அதானி விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு பிப்.24ம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதானி விவகாரம் தொடர்பான மற்ற மனுக்கள் நாளை விசாரணைக்கு வருவதை மனுதாரர் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து காங்கிரஸ் மனுவையும் நாளை விசாரிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News