Loading . . .




இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்பு; ராஜிவ் நினைவிடத்தில் இந்திரா காந்தி சிலை திறக்கிறார்

The Forecast 3 years ago காங்கிரஸ்




 திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

 இன்று பிற்பகல் 2.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரசார் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


 இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், மாநில பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், அசன் மவுலானா எம்எல்ஏ, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 அப்போது, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். 2ம் நாள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.


அங்கு நெடுஞ்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட இந்திரா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த போது காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவியை மகாத்மா காந்தி வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிரியாக இருந்து தொடர்ந்து எதிர்த்து வந்த அம்பேத்கருக்கும் அமைச்சர் பதவி வழங்கினார். அரசாங்கம் என்பது ஒரு கட்சியினுடைய அரசாங்கம் அல்ல. இது நாட்டு மக்களினுடைய அரசாங்கம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதுதான் சிறந்த ஜனநாயகம் முறை என்பதை காந்தியின் ஆலோசனையுடன் ஜவஹர்லால் நேரு நடைமுறைப்படுத்தினார்.


இதை பிரதிபலிக்கும் விதமாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் 50 சதவீதத்தை இளைஞர்களுக்கும், பழங்குடியின பட்டியலினத்தவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது. இதுதான் சமூக நீதி. அதானியை நம்பி முதலீடு செய்த பணம் தற்போது எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. இது தவிர்த்து வேறு ஒரு சில காரணங்களால் ரூ.10ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு துணை போனதால் மக்கள் பணம் பறிபோய் இருக்கிறது. ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் துணை போனதால்தான் அதானி இதுபோன்ற மோசடியை செய்துள்ளார். அதானி குறித்து பிரதமர் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். அதானியின் செயலுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார். டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை கைது செய்யும் ஒன்றிய அரசு ஏன் அதானியை கைது செய்யவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News