அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அவர்கள்- மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,
The Forecast 2 years ago மின்சார துறை
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்கள், பொறியாளர் கழகம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் (10.05.2023) சென்னை தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு) .ரா.மணிவண்ணன், இயக்குநர் (பகிர்மானம்) .மா.சிவலிங்கராஜன், இயக்குநர் (நிதி) (பொ) .மலர்விழி, வாரிய செயலாளர் ஆ.மணிக்கண்ணன், கூடுதல் ஆணையர் (தொழிலாளர் நலன்) . எம்.சாந்தி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதன் இறுதி கட்டமாக தொழிற்சங்க நிர்வாகிகள், பொறியாளர்கள் சங்கங்கள் மற்றும் இதர சங்க நிர்வாகிகள் 10.05.2023-ம் நாளன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களுடன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
01.12.2019 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழு கடந்த ஆட்சியில் 07.12.2019ல் தான் அமைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 8 முறை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி இன்று முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வு.
01.12.2019-ம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு.
ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.527.08/- கோடி கூடுதல் செலவாகும்.
இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2019-ம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு 01.04.2022ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும், 01.04.2022 முதல் 31.05.2023 வரை வழங்கப்படவேண்டிய நிலுவை தொகையினை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71/- கோடி.
மேலும் 01.12.2019 முதல் 31.03.2022 வரையிலான 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500/- வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையினை மேற்குறிப்பிட்டவாறு இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும்.
ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978.
10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62,548.
வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்ச்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.
மேற்காணும் முடிவினை அனைத்து தொழிற்சங்கங்களும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0 Comments