மருத்துவமனை பாதுகாப்பு அவசர சட்டத்தை நிறைவேற்ற கேரள அமைச்சரவை ஒப்புதல்
The Forecast 2 years ago கேரளா
திருவனந்தபுரம்: மருத்துவமனை பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அதிகாலை நேரத்தில், சந்தீப்(41) ஆசிரியரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். போதையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட அவர், லேசாக காயங்களுடன் சிகிச்சை அளிக்க வேண்டி, மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.அப்போது வந்தனா தாஸ் (25) என்ற பெண் மருத்துவர், அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென சந்தீப் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து வந்தனாவை சரமாரியாக குத்தினார். இதில் வந்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சூழலில், அதே நாளில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டம் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு பிரவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மருத்துவர்கள் செய்த போது, அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மருத்துவர்களையும், செவிலியர்களையும் பிரவீன் தாக்கி இருக்கிறார். இதில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பலத்த காயமடைந்தனர்.இந்த சம்பவங்களை கண்டித்ததும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேரளாவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தராத வரை, பணிக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பினராயி விஜயன், ஏற்கனவே இருக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்து அவசர சட்டத்தை இயற்றுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து, பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், மருத்துவர்களை தாக்கினால் ஒரு மணிநேரத்திற்குள் எப்ஐஆர் பதிவு செய்யும் வகையிலுமான விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.மருத்துவர்களை தாக்குபவர்கள்,ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலும் அம்சம் இடம்பெற்றுள்ளது.இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
0 Comments