தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் உறுப்பினராக ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். குழுவின் துணைத் தலைவராக பொருளாதார பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சனும், குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ஆர்.சீனிவாசனும் செயல்பட்டு வருகின்றனர்.
பகுதி நேர உறுப்பினர்களாக சூழலியல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.தீனபந்து, சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர்கள் ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் உள்ளனர்.
திட்டக் குழு உறுப்பினர்களில் சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தற்போது தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது இடத்தில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் திட்டக் குழு துணைத் தலைவராக இருந்த நாகநாதனின் மகன், எழிலன் ஆவார். மருத்துவராக உள்ள அவர் திட்டக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments