கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கோடைக்காலத்தை பயனுள்ளதாக கழிக்கவும், பாரம்பரியக் கலைகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் நடத்தப்படும் பத்து நாள் இலவச கோடைக்காலப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் தலைமுறை கற்றல் மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மித்ரா இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.
இந்த முகாமில் மாணவர்களுக்கு துடும்பாட்டம், தேவராட்டம், பறையாட்டம், நிகழ்த்துக் கலை, ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதோடு, பாரம்பரியக் கலைகளின் மீது ஈடுபாட்டை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
முகாமை கற்றல் மையத்தின் வழிகாட்டி முனைவர் வெ. இறையன்பு IAS (ஓய்வு), தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்., தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனுடன், கண்ணகி நகரில் பெண்கள் சுயச்சார்பு பெறும் நோக்கில் இருபது பெண்களுக்கு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு ஓட்டுநர் உரிமமும் இலவச சீருடையும்வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த சரவணன், சுரேந்தர், சாய்சேஷன், இளைஞர் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா, பேராசிரியர் நடராஜன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கற்றல் மைய நிறுவனர் மாரிசாமி முன்னிலை வகித்தார்.
இந்த முயற்சிகள் கண்ணகி நகர் இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறன் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments