பாஜக எம்பி மீதான பாலியல் புகார்; 5 நாடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு: பதிவுகளை கேட்டு போலீஸ் கடிதம்
The Forecast 2 years ago உலக செய்திகள்
பாஜக எம்பி மீதான பாலியல் புகார் தொடர்பாக 5 நாடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு டெல்லி காவல் துறை கடிதம் எழுதியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 வழக்கு பதியப்பட்டுள்ளது. பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் சமர்பிக்கலாம் என்று டெல்லி காவல் துறை அறிவித்திருந்தது.இந்நிலையில், இந்தோனேசியா, பல்கேரியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளின் போது தாங்கள் பாஜக எம்பியால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வீராங்கனைகள் கூறினர். அதனால் அந்த நாடுகளிடம் இந்திய வீராங்கனைகள் மற்றும் பாஜக எம்பி இருந்த சிசிடிவி பதிவுகளை தருமாறு டெல்லி காவல் துறை கோரியுள்ளது. மேற்கண்ட வழக்கில் வரும் 15ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறை தயாராகி வருகிறது. மேலும் இவ்வழக்கில் மல்யுத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் உட்பட இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments