Loading . . .




ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு மாநாடு: மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது

The Forecast 2 years ago உலக செய்திகள்

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு இதன் தலைமைப் பதவியை ஏற்கும். அதன்படி 2023-ம் ஆண்டின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. கல்வி, நிதி, பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி, பெண்கள் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. நிதி கட்டமைப்பு தொடர்பான 3-வது மாநாடு மாமல்லபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

வருகிற 21-ந் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துதல், நிலையான வளர்ச்சியை நோக்கி நிதியளிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை கட்டியெழுப்புதல், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து அதனை கட்டியெழுப்புதல், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு அதிக மூலதனத்தை செயல்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.

மாமல்லபுரத்தின் செழுமையான கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்த உள்ளூர் உல்லாச பயணங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில் யோகா அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News