விவசாயிகளுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய பயிற்சி நிலையம் - ரூ.1.50 கோடியில் மதுரையில் திறப்பு
The Forecast 2 years ago மதுரை
குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பத்தை 36 மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 38 ஆண்டாக பயிற்சி அளித்து வரும் தமிழக வேளாண்மைத் துறையின் ஒரே பயிற்சி நிலையமாக மேலூர் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் திகழ்கிறது.
இங்கு இதுவரை 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சி நிலையத்திற்கு ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதியுடன் கூடிய புதிய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை மேலூர் விநாயகபுரத்தில் 1985ம் ஆண்டு முதல் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள சென்னை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் தவிர்த்து 36 மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வேளாண்மைத் துறையின் ஒரே பயிற்சி நிலையம் இது. ஆண்டுதோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள், நீர் மேலாண்மை, நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து 4 நாட்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.
விவசாயிகளோடு, வேளாண் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி உள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவகம் மூலம் ஆரோக்கிய உணவுகள், சிற்றுண்டிகள் மூன்று வேளை வழங்கப்படுகின்றன. கடந்தாண்டு வரை பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த பயிற்சி நிலையத்திற்கு மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் (2020-21) ரூ.1.50 கோடியில் புதிய கட்டிடம் வேளாண்மை பொறியியல் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த பயிற்சி நிலையத்தின் அலுவலகம் தரைத்தளத்திலும், முதல் மாடியில் நவீன வசதிகளுடன் பயிற்சி அரங்கு, நூலகம் அமைந்துள்ளது.
0 Comments