வணிகர் நல வாரியத்துக்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
The Forecast 1 year ago வணிகர்கள் சங்கம்
வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இன்னல்கள் நேரிடும்போது உதவி செய்வதற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்துக்கு ரூ.2 கோடி வழங்கி ஆணையிடப்பட்டது. அதன்படி, அந்த நலவாரியம் 1989-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அதன் தலைவராக முதல்வரும், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சரும் செயல்பட்டு வந்தனர்.
இந்த வாரியத்துக்கான சட்டத்திட்டங்கள், செயல்பாடுகள், கணக்கு தணிக்கைகள், அதிகார வரையறைகள் போன்றவையும் வகுத்து அளிக்கப்பட்டிருந்தன. அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வணிகர் நல வாரியத்தில் உள்ள அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம்2011 ஜூலை 21-ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளதால், புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் எனவும், தங்களின் கோட்டத்துக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த வணிகர்களை தேர்வுசெய்து, அவர்களின் முழு விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்என்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இதுகுறித்த கருத்துருவை அரசுக்கு, தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூடுதல் ஆணையர் அனுப்பி வைத்துள்ளார். அதை கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை மாற்றி அமைத்து அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, அதன் தலைவராக முதல்வரும், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சரும் இருப்பார்கள். 30 அலுவல்சாரா உறுப்பினர்கள்: அலுவல் சார்ந்த உறுப்பினராக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், வணிக வரி ஆணையர், நிதித்துறை முதன்மை செயலாளர் உட்பட 5 பேர் இருப்பார்கள். வணிக வகைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதால் அனைத்து பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 30 ஆக உயர்த்தி அரசு நியமனம் செய்கிறது. சென்னையைச் சேர்ந்த வி.பி.மணி, எ.எம்.சதக்கத்துல்லா, ஆர்.ஆர்.ஜெயராம் மார்த்தாண்டன், மதுரையை சேர்ந்த எஸ்.ரத்தினவேலு, தூத்துக்குடி ரங்கநாதன், திருச்சி எம்.கண்ணன் உட்பட 30 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீடிக்கும். மற்றவர்கள் 3 ஆண்டுகள் செயல்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments