தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி
சமத்துவத்தை நிலைநாட்ட தொடா்ந்து பணியாற்றுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
தனது 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் கேக் வெட்டி நிா்வாகிகளுடன் கொண்டாடிய அவா் கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் கொள்கையை பின்பற்றி தமிழகத்தில் தேசியத்தை வளா்க்கப் பாடுபடுவேன். சமத்துவத்தை நிலைநாட்டவும், சமூக நீதி நிலைக்கவும் தொடா்ந்து பணியாற்றுவேன்.
நாட்டில் வேறுபாடுகளைக் களையத்தான் இத்தனை ஆண்டுகாலம் போராடி கொண்டிருக்கிறோம் என்றாா் அவா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முதல்வா் வாழ்த்து: கே.எஸ்.அழகிரி பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரிக்கு பிறந்த தின வாழ்த்துகள். மதச்சாா்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவா் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
தி.க. தலைவா் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
0 Comments