இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அதற்கென தனித்துவமான சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் உருவாகும் புதிய சவால்களை சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டங்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் உருவாகும் அனைத்து பிரச்சினைகளையும் கையாளுவதற்கு போதுமானதாக இல்லை என்று அரசு கருதுகிறது. இதனால், செயற்கை நுண்ணறிவுக்கென விரிவான சட்ட வடிவமைப்பை உருவாக்கும் பணிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
புதிய சட்டம், போலி உருவாக்கப்பட்ட காணொளிகள், தவறான தகவல் பரவல் மற்றும் இணைய வழி குற்றங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாமல், பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கல்வி, மருத்துவம், நிதி மற்றும் அரசுப் பணிகள் உள்ளிட்ட பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பொறுப்புடன் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தெளிவான சட்ட நடைமுறையை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான சட்ட அடித்தளத்தை உருவாக்கும் முக்கியமான முன்னெடுப்பாக அது அமையும்.
0 Comments