Loading . . .




தமிழக கோவிலில் அர்ச்சகர் நியமனம் அறநிலையத் துறை கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை

Arut Selvan 3 years ago அரசியல் செய்திகள்

தமிழகம் கோயில்களின் ஆகமங்கள் தொடர்பான 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை

கோயில்களின் ஆகமங்கள் தொடர்பான 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை: கோயில்களின் ஆகமங்கள் தொடர்பான 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையத் துறையின் விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், எந்தெந்த கோயில்களி்ல் எந்தெந்த மாதிரியான ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசு சார்பி்ல் இரு உறுப்பினர்களை குழுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நியமிக்க அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர் மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல்முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் கடந்த நவ. 4-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இதை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அமைப்பின் தலைவரான டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கோயில்களின் ஆகமங்களைக் கண்டறிய உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்தக்குழுவின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் தற்போது ஆகமங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத கேள்விகளுடன் அறநிலையத்துறை இந்த சுற்றறிக்கையை அனைத்து கோயில்களுக்கும் அனுப்பியுள்ளது.

சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் குறித்து தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தயாரித்துள்ள 50 கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் அவரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள குழுவில் நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இன்னும் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை இக்குழுவில் நியமிக்கக்கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த நவ. 4-ம் தேதி கோயில்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டது என தமிழக அரசின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களைக் கோரும் வகையில் உள்ளதாகக்கூறி அதற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News