சசிகலாவால் தன் உயிருக்கு ஆபத்து என்று ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஜெ.தீபா பற்றியும், அவரது தாய் பற்றியும் அவர் பல தகவல்களை கூறி இருப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இணக்கமான சூழல் இருந்ததில்லை என்றும், ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் தெரிவித்து இருந்ததாகவும் சசிகலா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
உண்மை விரும்பியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்கிற கேள்வியே எழுந்திருக்காது. எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3-வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய் அத்தையை பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.
0 Comments