Loading . . .




பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் அவதூறு பேச்சு காங்கிரஸ் கண்டனம்.

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

காங்கிரஸில் இருந்து குரல்... | பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சுக்கு சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம் முதல்வர் பூபேஷ் பெகல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வரான இவர் மேலும் கூறும்போது, “பிலாவல் பூட்டோவின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும். நமது பிரதமரைப் பார்த்து அவ்வாறு பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாம் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், இது நமது நாட்டைப் பற்றியது; நமது பிரதமரைப் பற்றியது. நரேந்திர மோடி நமது பிரதமர்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அப்போது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான் என சாடினார். இதையடுத்து, ஐநா பாதுகாப்பு அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்தியா கண்டனம்: பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு அது.

லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என தனது கண்டன உரையில் அவர் குறிப்பிட்டார்.

பாஜக போராட்டம்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News