காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் நேற்று கடும் அமளி
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
நாட்டுக்காக பாஜ என்ன செய்தது?’ என கேள்வி கேட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் ஆல்வாரில் நேற்று முன்தினம் நடந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது, ராகுல் முன்னிலையில் அவர் பேசுகையில், ‘‘இந்த தேசத்திற்காக காங்கிரஸ் கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது. ஆனால் பாஜவினர் அவர்கள் வீட்டில் வளர்க்கும் ஒரு நாயை கூட இழந்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்றும், எங்களை தேச விரோதிகள் என்றும் கூறுகின்றனர். சீன எல்லை விவகாரத்தில் வெளியில் சிங்கம் போல் பேசும் பாஜ அரசு, செயலில் எலியை போல் நடந்து கொள்கிறது’’ என கடுமையாக குற்றம்சாட்டினார்.
மறுதினத்துடன் முன்கூட்டியே கூட்டம் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
* கூடுதல் செலவுக்கு ரூ.3 லட்சம் கோடியா?
ரூ.3.25 லட்சம் கோடிக்கான துணை மானிய கோரிக்கை மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது. அப்போது, கூடுதல் செலவுக்கு ரூ.3.25 லட்சம் கோடி செலழிக்க ஒன்றிய அரசுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதற்கு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி எம்பிக்கள் பேசுகையில், ‘பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துணை மானிய கோரிக்கையாக இவ்வளவு பெரிய தொகையை கேட்பதா? திட்டமிடுவதில் இவ்வளவு தவறு எப்படி வந்தது என்பதுதான் எழும் முக்கிய கேள்வி? இது தவறான கணக்கீட்டைக் குறிக்கிறது. பட்ஜெட் தயாரிப்பதில் கவனம் இல்லாததால் இது நடந்திருக்கலாம்’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
* கூட்டு குழு அமைப்பு
நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. இதன்படி, மக்களவையிலிருந்து 21 எம்பிக்கள், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிக்கள் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் நேற்று தகவல் தெரிவித்தார். இந்த குழு தனது அறிக்கையை பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத் தொடரில் (பொதுவாக மார்ச் மாதம் தொடங்கும்) மக்களவையில் சமர்பிக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
* இது இத்தாலி காங்கிரஸ்
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. இது அசல் காங்கிரஸ் அல்ல. அசல் காங்கிரசில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், சர்தார் படேல் போன்ற தலைவர்களை அது எப்படி நடத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது வேறு சிலரின் தலைமையிலான இத்தாலிய காங்கிரஸ். எதிர்க்கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்தவர் சோனியா காந்தி இது போலி தலைவர்கள் நிறைந்த போலி காங்கிரஸ். தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்’ என்று தெரிவித்தார்.
0 Comments