Loading . . .




அ.தி.மு.க.,வுக்கு 15, பா.ஜ.,வுக்கு 25 ; புது 'பார்முலா

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

அ.தி.மு.க.,வுக்கு 15, பா.ஜ.,வுக்கு 25 ; புது 'பார்முலா!'


அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள பா.ஜ., தலைமை, கூட்டணி தொடர்பான 'பார்முலா' ஒன்றை வகுத்துள்ளது.

பழனிசாமி தரப்புக்கு 15 தொகுதிகள் ஒதுக்கும் வகையிலும், மீதம் உள்ள தொகுதிகளை பா.ஜ., தன் வசம் வைத்து, கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கும் விதத்திலும், இந்த பார்முலா வகுக்கப்பட்டு உள்ளது. இதில், பா.ஜ.,வின் உள்ஒதுக்கீடாக பன்னீர் அணிக்கு, எட்டு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக, இரண்டாம் கட்ட தலைவர்கள் இடையே பேச்சு துவங்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அ.தி.மு.க., அணிகள் இணைவது அவசியம் என, பா.ஜ., தலைமை வலியுறுத்தி வருகிறது. பா.ஜ., தயார்இதை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும், பழனிசாமி எதிர்ப்பு கொடி பிடிக்கிறார்.


அதனால், பன்னீர்செல்வம் தன் பலத்தை நிரூபிக்க, மாநிலம் முழுதும் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். அவர்கள் அனைவரையும் இன்று, சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இதையறிந்த பழனிசாமியும் ஆலோசனைக்கு தயாராகிறார்.


பன்னீர்செல்வம் தரப்பினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கவும், வரும் 27ம் தேதி சென்னையில் நிர்வாகிகள் கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார்.இந்த சூழ்நிலையில், பழனிசாமிக்கு நெருக்கமான, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம், பா.ஜ., மேலிடம் சார்பில், பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, புதிய பார்முலா குறித்து கூறியுள்ளதாவது:பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை விட்டு விட்டு, வலுவான தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, வெற்றி சாத்தியம்.எனவே, முன்பு போல் பழனிசாமி - பன்னீர்செல்வம் இரட்டை தலைமையின் கீழ், அ.தி.மு.க., செயல்பட்டால், லோக்சபா தேர்தலை அ.தி.மு.க., தலைமையில் சந்திக்க, பா.ஜ., தயாராக உள்ளது. அவ்வாறு இருந்தால், பா.ஜ.,வுக்கு 10 முதல் 13 தொகுதிகள் வரை ஒதுக்கினால் போதும்.


மீதமுள்ள தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் கூட்டணி கட்சிகளும் போட்டியிடலாம். அடுத்த நகர்வுஇருவரும் இணைந்தால், அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் தொடரும். பன்னீர்செல்வத்தை சேர்க்க மாட்டோம் என பிடிவாதம் பிடித்தால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த நிலை ஏற்பட்டால், பன்னீர்செல்வம் அணி, பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, பா.ஜ., 25 தொகுதிகளில் போட்டியிடும்.


மீதமுள்ள 15 தொகுதிகள் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்படும். இந்த கூட்டணிக்கு பழனிசாமி அணி தலைமை வகிக்கலாம். தாமரை சின்னத்தில் பன்னீர்செல்வம் அணிக்கு, எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படும். பா.ம.க., மற்றும் அ.ம.மு.க.,வுக்கு, அந்தந்த கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்படும். இந்த இரண்டில் ஒரு முடிவை, நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பழனிசாமி தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு பா.ஜ., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் எந்த முடிவை பழனிசாமி எடுக்கப் போகிறார் என்பது, வரும் 27ம் தேதி கூட்டத்திற்கு பின் தெரிய வரும். அதற்கேற்ப அடுத்த நகர்வுகளை மேற்கொள்ள, பா.ஜ.,வும் பன்னீர்செல்வம் தரப்பும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News