பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: நாளை விசாரணை
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் இந்த அறிவிப்பில் கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கவில்லை. விவசாயிகள் தங்களின் கரும்பை கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கைவைத்திருந்தனர். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளதாகவும், அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24ம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments