அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்புக்கு பணிந்தார் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என கூறி பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்ட ஆர்.என்.ரவி
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்புக்கு பணிந்தார் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என கூறி பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்ட ஆர்.என்.ரவி
அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களின் எதிர்ப்புக்கு பணிந்து, ‘தமிழ்நாடு ஆளுநர்’ ஆர்.என்.ரவி என கூறி பொங்கல் வாழ்த்துச் செய்தி இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, சமீபகாலமாக அரசுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறார். குறிப்பாக, புதிய கல்வி கொள்கையை ஆதரிப்பது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தமிழர் நலன்களுக்கு ஆதரவான மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது, பல்கலைக்கழக விழாக்களில் கலந்து கொண்டு தமிழ்நாடு மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் கருத்துக்களை திணிப்பது என பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு அரசு அச்சிட்டு வழங்கிய உரையில் இல்லாத வார்த்தைகளை சேர்த்தும், சில வார்த்தைகளை நீக்கியும் கவர்னர் ஆர்.என்.ரவி படித்தார். குறிப்பாக, புத்தகத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு, பகுத்தறிவு, திராவிட மாடல், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை கவர்னர் படிக்கவில்லை. இதனால் கவர்னருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாகவே சட்டப்பேரவையை விட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
அதையடுத்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 12ம் தேதி (நேற்று முன்தினம்) பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வாசகத்துக்கு பதில் தமிழக ஆளுநர் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசு முத்திரைக்கு பதில், ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெற்றிருந்தது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் கவர்னரின் இதுபோன்ற செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், தன்னார்வலர்கள் சமூகவலை தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கவர்னரை பற்றி டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்தும் புகார் அளித்தனர். இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து இன்று பொங்கல் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ ஆர்.என்.ரவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்துச் செய்தி என கூறிப்பிட்டு, “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்” என்று வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களின் எதிர்ப்புக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பணிந்துள்ளார். மேலும் டெல்லியில் தங்கியுள்ள ஆளுநரிடம் ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்து, உங்களின் நடவடிக்கைகளால் பாஜவுக்கு கடுமையான கெட்ட பெயர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் ஆளுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது
0 Comments