Loading . . .




அதானி முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: ஒன்றிய அரசின் பரிந்துரையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் ஒன்றிய அரசு தந்த பரிந்துரையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக நாங்களாகவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம்’ என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் கணக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் இது மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியது. இந்த நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ஹின்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணைக்கான செபியின் பரிந்துரையை சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கியதோடு, அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம். யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,‘‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் சீலிடப்பட்ட கவரின் பரிந்துரையை ஏற்க முடியாது. சீலிட்ட கவரில் நிபுணர்கள் பெயரை பரிந்துரைகளாக வழங்க வேண்டாம்.

ஏனெனில் உச்ச நீதிமன்றமே விசாரணைக் குழுவை இந்த விவகாரத்தில் இறுதி செய்யும். மேலும் இந்த வழக்கை பொருத்தமட்டில் விசாரணையில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதில் ஒன்றிய அரசு பரிந்துரைத்த குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக இருந்து விடக்கூடாது. அது பொதுத்தளத்தில் தவறானதாக அமைந்து விடும். வேண்டுமானால் சீலிட்ட கவரில் வழக்கு தொடர்பான உள்விவரங்களை ஒன்றிய அரசு தரலாம். ஆனால் அதிலும் இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் தான் எடுக்கும் என தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,”ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் விதிகளை மீறி 75சதவீத பங்குகளை அதானி நிறுவனமே வைத்துள்ளது. அதை வெளிநாடுகளில் உள்ள ஆப்ஷோர் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்து, சந்தையில் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அறிக்கையின் அடிப்படையில் அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதா?, அல்லது சந்தை அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் வலியுறுத்தினார்.தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தவரையில் ஒன்றிய அரசு மட்டுமல்ல எந்த தரப்பிடம் இருந்தும் நாங்கள் பரிந்துரை பெயர்களை பெறப்போவதில்லை. உச்ச நீதிமன்றம் தான் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்தையும் இறுதி செய்யும்.

மேலும் சீலிட்ட கவரில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பெயர்களை வெளியிட போவதும் கிடையாது. அவர்களும் வெளியீடு செய்யக்கூடாது. குறிப்பாக அதானி நிறுவனம் முறைகேட்டு விவகாரத்தில் கண்டிப்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள தற்போது பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். மேலும் உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். மேலும், அதானி குழுமம் பங்குகள் முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை கோரிய வழக்குகள் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News