Loading . . .




மகாராஷ்டிரா அரசு கவிழ்ப்பு விவகாரம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லுமா?...21ம் தேதி சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா அரசு கவிழ்ப்பு விவகாரம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லுமா?...21ம் தேதி சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை

மகாராஷ்டிரா அரசு கவிழ்ப்பு விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லுமா? என்பது தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவையின் அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. ஆட்சி கவிழ்ந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தன.

இவ்வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, ‘நபம் ரெபியா’ வழக்கு (கடந்த 2016ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் அன்றைய சபாநாயகர் நபம்  ரெபியா வழக்கில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தால் சம்பந்தப்பட்ட  சபாநாயகர், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று  தீர்ப்பளிக்கப்பட்டது) தீர்ப்பினை 7 நீதிபதிகள் அமர்வு மூலம் மறுஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட வாதம் நடைபெற்றது.

தீர்ப்பினை மறுஆய்வு செய்வது அவசியம் என்று உத்தவ் தாக்கரே தரப்பும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய தேவையில்லை என்று முதல்வர் ஷிண்டே தரப்பினரும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவில், ‘நபம் ரெபியா வழக்கு, இந்த வழக்கிற்கு தகுதியானதா? என்பது குறித்து வரும் 21ம் தேதி இரு வழக்குகளும் விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தது


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News