Loading . . .




மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது- ராகுல் காந்தி கடும் தாக்கு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது- ராகுல் காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் (100 நாள் வேலை திட்டம்) ஒன்று.இந்த திட்டத்துக்கு தற்போதைய மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பதாகவும், இந்த திட்டத்தில் பணியாளர்களின் ஆதாரை இணைக்க வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் தளத்தில் கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் இந்திய கிராமப்புற பொருளாதாரத்தின் அடித்தளம். இந்த புரட்சிகர கொள்கை எண்ணற்ற குடும்பங்களுக்கு உதவிகரமாக உள்ளது. கோடிக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீட்டை கவனிப்பதற்கு உதவுகிறது.ஆனால் மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைக்கு இந்த திட்டம் பலியாகி வருகிறது. முதலில் இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது. தற்போது ஆதார் இணைப்பு நடந்து வருகிறது. இரண்டும் ஏழைகளின் வருவாய் மீது நடந்த தாக்குதல் ஆகும். 100 நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டால் 57 சதவீத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தை இழப்பார்கள். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்க அரசிடம் எந்த கொள்கையும் இல்லை. மக்களின் வேலையை பறிப்பதும், ஏழைகளுக்கு உரிமைப்பட்ட பணத்தை பறிப்பதுமே அரசின் நோக்கம் ஆகும். புதிய திட்டமோ, யோசனையோ இல்லை. ஏழைகளை சித்ரவதை செய்வது ஒன்றே அரசின் கொள்கை. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'மோடி அரசின் கோடாரி 100 நாள் வேலை திட்டத்துக்கு எதிராக வேலை செய்கிறது. பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கான நிதியில் 33 சதவீதம் குறைப்பு. நரேந்திர மோடிஜி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டாம், ஏழைகள் மன்னிக்கமாட்டார்கள்' என குறிப்பிட்டு உள்ளார்


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News