பெருநகர சென்னை - வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆய்வு .
The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
பெருநகர சென்னை - வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆய்வு .
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117 ஜி என் செட்டி சாலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள கழிவறையினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.03.2023) நேரில் பார்வையிட்டு அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொது மக்களின் நலன் கருதி அங்குள்ள திறந்தவெளி இடத்தில் கூடுதலாக குளியலறை வசதியினை விரைந்து ஏற்படுத்திடவும், கழிவறையினை சுத்தமாக பராமரித்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113 கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனைக்கூடம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் இரத்தப் பரிசோதனைகள் இ.சி.ஜி, ஸ்கேன், ஊடுகதிர், சளிப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை நடவடிக்கைகளையும் டயாலிசிஸ் மையத்தின் நடவடிக்கைகளையும் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141 கண்ணம்மாபேட்டையில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையினை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்குள்ள புகைப்போக்கியில் (Chimney) அலுமினிய நிறத்தில் வர்ணம் பூசவும், மின் மயான கட்டடத்தின் நுழைவு வாயிலில் சாய்வுதளப் பாதை அமைத்திடவும், தகன மேடை அறையினை சீரான கால இடைவெளியில் பராமரித்திடவும், காற்றினை வெளியேற்றும் மின் விசிறிகளை (Exhaust Fan) அமைத்திடவும், மின் மயான கட்டடத்திற்கு வர்ணம் பூசிடவும், கல்லறைப் பகுதியினை சீராக பராமரிக்கவும், மயானபூமியினை பசுமையாகப் பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களுக்கு மஞ்சள் பச்சை நிறம் கொண்ட வர்ணம் பூசிடவும், நீரூற்றுகள் அமைக்கவும், நாய்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தினை சீரமைக்கவும் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141 கண்ணம்மாபேட்டையில் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இடத்தினை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு உரம் விற்பணை செய்யும் பொருட்களில் பெருநகர சென்னை மாநகராட்சி இலச்சினையை (Logo) பொருத்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., நிலைக்குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ். ராஜேந்திரன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments