Loading . . .




வடகிழக்கு பருவமழைக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆய்வு கூட்டம்.: தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப.,

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர்  தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாளது தேதி வரை ஏற்பட்டுள்ள மழைப்பொழிவு, நீர்நிலைகளின் நீர் இருப்பு, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மற்றும் பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறை அலுவலர்களும், காவல் துறை மற்றும் முப்படையினைச் சார்ந்த அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தங்களது துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 

பின்னர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பின்வரும் நடவடிக்கைகளை அடுத்த பதினைந்து நாட்களுக்குள் (30.09.2023) செய்து முடிக்க உடனடியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். 

பெருநகர சென்னை மாநகராட்சி தென்னக இரயில்வே நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்துத் துறைகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, உரிய ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளம் ஏற்படும் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய்கள் வெள்ள நீரால் சேதமடையாமல் இருக்கும் வகையில் வலுப்படுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக் காலங்களில் பலவீனமான மற்றும் சேதமடைந்த பொதுக் கட்டடங்கள் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும் சிறப்பு முயற்சி மேற்கொண்டு, பலவீனமான மற்றும் சேதமடைந்த கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் தடுப்பு ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

அரசுக் கட்டடங்களின் மேல் தளத்தை ஆய்வு செய்து, குப்பையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசுக் கட்டடங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் அளவை அதிகரிக்கும் நோக்கில், உள்ளாட்சி அமைப்புகள் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள், பலவீனமான மின்வழித்தடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழை, வெள்ளம் ஏற்படும் போது பொது மக்களுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை தகவல் TN SMART மற்றும் பொதுவான எச்சரிக்கை நெறிமுறை (Common Alerting Protocol) மூலம் வழங்க வேண்டும்.

பேரிடர் காலங்களில், தடையில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுரங்கப் பாதைகளுக்கு சிறப்பு கவனம் அளிப்பதோடு, சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள நீரின் ஆழத்தை கண்டறியும் பொருட்டு, சுரங்கப் பாதைகளில் இருபக்கமும் அளவீடுகள் எழுதப்பட வேண்டும். மேலும், சுரங்கப்பாதைகளில் நிறுவப்பட்டுள்ள உணர்வி வாயிலான எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டடங்கள் ஆய்வு  செய்து, பலவீனமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசிக்காத வண்ணம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும், கழிவு நீர் வடிகால்கள் மற்றும் மழை நீர் வடிகால்களை உடனடியாக தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத் தணிப்புப் பணிகளான மழை நீர் வடிகால் மற்றும் பெரும் வடிகால் பணிகள் ஆகியவற்றை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். ஒரு சில பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளதால், அவற்றை முடிக்க இயலாத நிலையில், எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகளுள் முக்கியம் வாய்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை அனைத்துத் துறையினரும் ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் இடங்களில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறும், பொதுமக்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் தேவையான குடிநீர் / கழிவு நீர் குழாய்களின் இருப்பை வைத்திருக்க வேண்டும்.

மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனமும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் இடங்களை மறு ஆய்வு செய்து, பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களை தங்க வைக்க தேவையான கட்டடங்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருப்பதோடு, உணவுக் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொது இடங்களான, மருத்துவமனைகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு கவனம் அளித்து, அங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் தூர் வாருவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சிகள் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும் கனமழையின் காரணமாக ஏற்படும் பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News