சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேவராஜூ நாகார்ஜூன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த முனைவர் தேவராஜூ நாகார்ஜூனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
நாட்டிலேயே பழமையான, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாகவும், சென்னை உயர் நீதிமன்ற சட்ட வல்லுநர்கள் அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன், பெருமைபடக் கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில் 1962 ஆக. 15-ல் சுதந்திர தினத்தன்று பிறந்த தேவராஜூ நாகார்ஜூன், 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 1991-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர் பின்னர் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றிய இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2024 ஆக.14-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments