கிண்டி மருத்துவமனை திறப்பு விழா - குடியரசு தலைவரை அழைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் பயணம் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார்.
இதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் நாளை (ஏப்.28) குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்தித்து, மருத்துவமனையை திறந்துவைக்க அழைப்பு விடுக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments