Loading . . .




நீலகிரி மாவட்ட ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

The Forecast 2 years ago நீதித்துறை

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகையில் நடைபெறும் நிகழாண்டுக்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக உதகையில் உள்ள தீட்டுக்கல்லில் மே 13 முதல் 30-ஆம் தேதி வரை 'ஹெலிடூரிசம்' என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெறவுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப் பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும். இதனால் மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் என அனைத்து தரப்புக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே 'ஹெலிடூரிசம்' திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் முருகவேல் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்படும் என்றும், உரிய ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயாமல் திட்டமிடப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, காடுகளுக்கு இடைப்பட்ட நகரப் பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிட கூடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலிடூரிசம் சேவை திட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News