சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி 12.9.2022-இல் ஓய்வுபெற்றார்.
இதையடுத்து மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றனர். தொடர்ந்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொ) எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்.19- ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (பொ) இருந்த எஸ்.வி.கங்காபுர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இதை ஏற்று குடியரசு தலைவர் மே 26-ஆம் தேதி எஸ்.வி.கங்கா புர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி.கங்காபுர்வாலா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், அரங்க.மகாதேவன், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்குரைஞர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து, புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்க்கை குறிப்பு: 24.5.1962-இல் மகாராஷ்டிரத்தில் பிறந்த கங்காபுர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985-இல் வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பாம்பே மெர்கன்டைல் கோஆபரேட்டிவ் வங்கி, ஜலகன் ஜனதா ஷாககரி ஆகியவற்றில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.
2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபுர்வாலா, 2022 டிசம்பர் முதல் மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (பொ) பொறுப்பு வகித்தார்.
இவர் தேசிய அளவிலான டென்னிஸ் மற்றும் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
0 Comments